பகிர துடிக்கும் படித்து சுவைத்தவைகள்

பெருமை
———-

உன் முதுகுக்கு பின்னால்
பேசுபவர்களை பற்றி கவலை படாதே…!
நீ அவர்களுக்கு
இரண்டு அடி முன்னால் இருக்கிறாய்
என்று பெருமை படு…!

—————————

நீயில்லா நான்..
—————

வார்த்தைகளே இன்றி
வாக்கியம் அமைத்தேன்…

வர்ணமே இல்லாமல்
வானவில் செய்தேன்…..

மேகமே இல்லாமல்
மழையினை அழைத்தேன்….

மென்மையே இல்லாமல்
தென்றலை பிடித்தேன்….

நீயே இல்லாமல் என்னை படைத்தேன்…
மறுநொடி மண்ணில் விழுந்தேன்…

மீண்டும் எழுந்தேன்…
உன்னை இணைத்தேன்…
பெண்ணாய் ஜொலித்தேன்…..

– சங்கீதா செந்தில்

————————-

தாகம்
———

மண்ணின் தாகம் வானம் கொட்டும்
மழையில் தணிகிறது.
விண்ணின் தாகம் வீணாய்ப் போகும்
கடலைக் குடிக்கிறது
.
அலைகளின் தாகம் கடலை விட்டு
கரைக்கு அலைகிறது.
தலைவனின் தாகம் தொண்டன் சிந்தும்
குருதியில் தணிகிறது.

ஏழையின் தாகம் எதிர்ப்பவன் முன்னே
எங்கோ போகிறது
கோழையின் தாகம் நீரைக் கண்டும்
குடிக்க மறுக்கிறது

நீரின் தாகம் பள்ளம் தன்னை
நோக்கிப் பாய்கிறது.
வேரின் தாகம் வேண்டிய மட்டும்
பூமியைப் பிளக்கிறது.

சிப்பியின் தாகம் சிறுதுளி வாங்கி
முத்தாய் ஆகிறது.
சிற்பியின் தாகம் சிதைந்த கல்லை
சிலையாய்ச் செய்கிறது.

நடிப்பவன் தாகம் கைகள் தட்டும்
ஓசையில் தணிகிறது.
குடிப்பவன் தாகம் குடலைக் கருக்கி
குழியில் சாய்க்கிறது.

கவிஞனின் தாகம் கற்பனை கொஞ்சும்
கவிதையில் தணிகிறது.
புவியே ஒருநாள் தாகம் கொண்டால்
பிரளயம் நடக்கிறது .

-சிவகுமாரன்
.

நீ யார்???

அடிக்கடி சண்டையிட்டாய்
வெறுப்புடன் பேச வைத்தாய்
நெஞ்சத்தை நோகடித்தாய்
தனிமையில் அழ வைத்தாய்
இத்தனையும் செய்ய நீ
என் எதிரியல்ல!

பாசமாய் பழகினாய்
அன்பாய் பார்த்தாய்
கனிவுடன் பேசினாய்
நேசத்தை வளர்த்தாய்
இத்தனையும் செய்த நீ
என் நண்பனல்ல!

அக்கறைக் காட்டினாய்
அதிகாரம் செய்தாய்
அறிவுரைகள் வழங்கினாய்
அரவணைத்துக் கொண்டாய்
இத்தனையும் செய்த நீ
என் பெற்றோர் அல்ல!

புதுப்பாடம் கற்பித்தாய்
சந்தேகங்கள் தீர்த்தாய்
சிந்தனைகள் வளர்த்தாய்
தவறுகளைத் திருத்தினாய்
இத்தனையும் செய்த நீ
என் ஆசான் அல்ல!

எனக்கு நீ எதிரியல்ல
ஆருயிர் நண்பனல்ல
தவமிருந்த பெற்றோர் அல்ல
சொல்லிக்கொடுக்கும் ஆசான் அல்ல
பாசமூட்டும் அன்னை அல்ல
அடிக்கடி சண்டையிட்டாய்
வெறுப்புடன் பேச வைத்தாய்
நெஞ்சத்தை நோகடித்தாய்
தனிமையில் அழ வைத்தாய்
இத்தனையும் செய்ய நீ
என் எதிரியல்ல!

பாசமாய் பழகினாய்
அன்பாய் பார்த்தாய்
கனிவுடன் பேசினாய்
நேசத்தை வளர்த்தாய்
இத்தனையும் செய்த நீ
என் நண்பனல்ல!

அக்கறைக் காட்டினாய்
அதிகாரம் செய்தாய்
அறிவுரைகள் வழங்கினாய்
அரவணைத்துக் கொண்டாய்
இத்தனையும் செய்த நீ
என் பெற்றோர் அல்ல!

புதுப்பாடம் கற்பித்தாய்
சந்தேகங்கள் தீர்த்தாய்
சிந்தனைகள் வளர்த்தாய்
தவறுகளைத் திருத்தினாய்
இத்தனையும் செய்த நீ
என் ஆசான் அல்ல!

எனக்கு நீ எதிரியல்ல
ஆருயிர் நண்பனல்ல
தவமிருந்த பெற்றோர் அல்ல
சொல்லிக்கொடுக்கும் ஆசான் அல்ல
பாசமூட்டும் அன்னை அல்ல
நீ யார், தெரியுமா?

சில நேரம் அழ வைத்தாலும்
பல நேரம் சிரிக்க வைத்தாய்
நெஞ்சத்தை நோகடித்தாலும்
மகிழ்ச்சியை எனக்களித்தாய்
நீ யார் தெரியுமா?
என் மூச்சு!

அன்பாய் பழகினாலும்
அளவோடு நிறுத்திக்கொண்டாய்
கனிவுடன் பேசினாலும்
பணிவுடன் நடந்துக்கொண்டாய்
நீ யார் தெரியுமா?
என் உயிர்!

காலம் மாறலாம்
என் காதல் மாறாது
காலம் சென்றாலும்
நம் உறவு மறையாது
உலகம் அழிந்தாலும்
நம் காதல் அழியாது!

என்றும் காதலுடன்
வம்ஷி , தெரியுமா?

——————————————————–

மனிதனின் வினோதப் பசிக்கு இரையாகும் சிசுக்கள்…..

hjhj

-சிரபுரத்தான்-

—————————————

j0433086

சுவடுகள்…
பறவைகள் பலவிதம் என்றாற்போல
மனிதச் சுவடுகள் ஒவ்வொன்றும் ஒருவிதம்…

குழந்தையின் சுவட்டில் மென்மையிருக்கும்,
கிழவனின் சுவட்டில் தளர்விருக்கும்…
இடைப்பட்ட மனிதரில் என்ன இருக்கும்? -அதில்
இந்த உலகத்தின் விந்தைகள் நிறைந்திருக்கும்…

சிலர் புத்தியின் சொல்லில் சுவடசையும்
பலர் சுவட்டின் வழியில் புத்தி செல்லும்…
வாழ்க்கைச் சித்திரம் பேசுகின்ற பலர்
வரலாற்றின் உண்மையும் இதுவே யாகும்.

முல்லைக்குத் தேர் தந்த பாரி தன் காலத்தில்
தொல்லைகள் தந்திடும் அரசரும் வாழ்ந்தனர்.
தந்தையைக் கொன்று அரசேறிய மன்னனுமுண்டு
தன் பிழை நொந்து துறந்திட்ட அசோகனும் உண்டு.

கிட்லரைப் போன்றதோர் அரசியல்வாதியும்,
காந்தியைப் போன்ற நல் அகிம்சாவாதியும்
போதுமே சுவடுகள் பன்மையைப் போற்றிட…
யாதுமே சுவடாகும் வரலாற்றின் பதிவிலே…

பணக்காரர் பாதையது நாகரீகமாம்
பிச்சைக்காரர்க்கது விபச்சாரமாம்.
படித்தவன் பிழை செய்தால் தந்திரமென்பர்.
பாமரன் தவறினைத் திமிறென்றுரைப்பர்..
ஒவ்வொருவர் சுவட்டிற்கும் அர்த்தம் படைத்தவன்
ஒன்றுமே அறிந்திடா மானிடன் தானே…!

பணத்திற்காக அலைபவன் பாதையில்
கள்வனும் வருவான் கயவனும் வளர்வான்.
பிணத்தைக் கண்டவன் பார்வையின் கண்ணே!
இரக்கமும் மலரும் அபகரிப்பும் நிகழும்.

நாலு பணம் உள்ளவன் நாக்கைப் பிரட்டிட
நாதாரிக் கூட்டமதை நியாயம் சொல்லும்.
ஏழைதன் வாயின் ஒவ்வொரு சொல்லையும்
ஏமாற்றுக் கூட்டம் பொய்யென்றுரைக்கும்.

இந்த யுகத்தின் சுவடுகள் தன்மை
இருளில் நடப்பவன் பாதை போன்றது…
குறிப்பறிந்து நடப்பவனும் உண்டு – படு
குறிப்பில் ஏதோ செய்பவனும் உண்டு.

அன்னை திரேசா வாழும் காலம்
மனித ஆயுள் வரைக்கும் நீளும்
மற்றவர் வாழ்வும் அவரவர் சுவட்டின்
அழகிலே அமையும்
அதுவே உலகின் மெய்நிலையாகும்.

ஆகச் சுவடுகள் அழியாத தொன்று – எம்
வாழ்வின் காலம் முடிந்தே விடினும்
பேசும் காலம் சுவட்டளவேயாம்
பேதலித்திடாது உணர்ந்து வாழ் மனிதா…

-சிரபுரத்தான்-

———————————————

புதிய உலகம் வேண்டும்

புதியதோர் உலகம் வேண்டும்
பொறாமை இல்லா குணம்,
உண்மையான நட்பும், காதலும்,
உண்மை பேசும் இதழ்கள்,
பிறர்க்கு உதவும் கரங்கள்,
நேர் வழியில் செல்லும் பாதம்,
புறம் பேசா நாக்கு,
களங்கம் இல்லா புன்னகை,
நல் எண்ணத்துடன் பார்க்கும் விழிகள்,
குறுக்கு வழி தேடா அறிவு,
ஜாதி இல்லா சமுதாயம்,
ஏமாற்றாத மனிதர்கள்,
வன்முறை இல்லா அரசியல்,
கொடுத்த வாக்கை நிறைவேற்றும் அரசியல்வாதி,
போட்டிகள் இல்லா வியாபாரம்,
உண்மையாக உழைக்கும் தொழிலாளர்கள்,
உழைப்புகெதத ஊதியம்,
நன்கொடை இல்லா கல்வி,
உண்மையை மட்டும் சொல்லும் நாளிதழ்,
அன்பும் பண்பும் மனிதநேயமும் கொண்டமனிதர்கள்,
இப்படியோர் புதிய உலகம் வேண்டும்

————————-

நன்றி நண்பா!!!
நண்பா!!!

உன்னை முதன் முதலில்
பார்த்த போது
உன் பெருமைகளை
அறியவில்லை நான்.

ஆனாலும் நீ…

இலையுதிர் காலத்தில்
என் துயர் அறிந்து
என்னை சிரிக்க வைத்தாய்.

என் அறியாமையை அறிந்து
என்னை சிந்திக்க தூண்டினாய்.

என் தனிமையை உணர்ந்து
பல தேசங்களில் இருக்கும்
நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தினாய்.

நான் சொல்லாமலே
என்னை என் தேவைகளை
உணர்ந்து உதவும் உன்னை
என் நண்பனாய் அடைந்த நான்
நிச்சயம் அதிர்ஷ்டசாலி தான்!!

நன்றி நண்பா!!!

——————————————————

வலி உமிழும் வாய்ப்பாடுகள்

என்ன கோபம்
என்று தெரியும் முன்னே
சில உறவுகள் பட்டுப் போகுது

வார்த்தைகள்…
வருவது சுலபம்
விழுவது சுலபம்
தருவது…கல(க்)கம்?

உள்ளே குத்தியதை
எடுக்க முடியவில்லை
வலி ஓரிடம்
வடு ஓரிடம்

கருகியதைப் போல்
காந்தல் மனங்களைப்
விலக்கியதால்
என் வாடிக்கைத்
தொடர்கிறது

உள்ளுக்குள் ஒன்று
உறவுக்குள் ஒன்று
லாபக் கணக்கில் அன்பு
அலங்கரிக்கப் படுகிறது

பாசத்தில் வேடம்
ஆசைக் கணக்கீடாய்
இட்டு வைக்கப் படுகிறது

பொறுமையைச் சொல்லுவார்
பொறுக்கத் தெரியாமலே

பொறுமை என்பது பலருக்குப்
பிறகு தான் புரிகிறது
பிரிவுக்குப் பின்னால்

வழிகள் வேறாகிப்
போன பின்
விழிகள் கூறாகிப்
பார்ப்பதேன்

நிறுத்திப் பார்ப்பது
யாரை என்று தெரியாமல்
விருப்பபடி வினாக்களோடு
நெருப்பில் தோய்த்து

பின்…
வீம்புக்குத் தேம்புவது
காண்போர்க்குப்
பாசக் கணக்குக் காட்ட

சரி…
முதுகில் முள்ளால்
வருடியது போதும்
முன்னால்
பாசத்தைக் காட்டி

உணர்ந்ததால் விலகியது
புலம்பி விளம்புவதால்
அளம்பிவிடும்
அன்பை அடியோடு

உணர்ந்து திருந்துவதை
உணராமல் மலருமோ
அன்பு…
நினைத்தபடி

>

 பழைய புத்தகக்கடை
என் வறுமையின் வெளிப்பாடாய்
அறிவுபசி அவ்வப்போது தீர்க்கும்
எல்லா புத்தகமும் தான்
மதிப்பில்லை என்பதைவிட
மதிப்பவர் கையிலில் போகவில்லை
என்பதையே உரைத்தன
முண்டாசு பாரதி கரையான் அரித்து கிடந்தான்
வள்ளுவன் நிலைமை அதைவிட மோசம்
புகழ்பெற்ற ஆங்கில புத்தகங்கள் கூட
ஐந்து ருபாயில் சீசீத்தது
பையில் கிடக்கும் பத்து ருபாய்க்கு
ஏதாவது புத்தகம் கிடைக்குமா
அலசிஅலசியதில்
அனாதையாய் சிரித்தது
ஓரத்தில் என் கவிதை புத்தகம்

 

நட்பு

உறவென்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும்

உயிர் என்று சொல்லிக்கொள்ள ஒரு நட்பு இருந்தால்

போதும் உன்னை போல்!

 
நட்பு

நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம் நட்பு.
அதி சிறந்த பரிசு
நட்பு.
நட்புக்கு நிகர்
நல்ல நட்பே!
அழகிய மாடம் நட்பு.
தூய்மை அதன் அரண்.
மெய்யாய் இருக்கும் வரை
மெய்க் காவல் நட்பு!
உன்னை எடை போட
உன் நட்பு போதுமாகும்.
நம்பிக்கை நாணயம்
சேர்ந்த கலவை நட்பு.
துன்பத்தில் சம பங்கு
நல் நட்பு.
உன் விழியில் தூசி
நட்பின் விழியில் கண்ணீர்.
நல்ல நட்பு
நாட்பட்டே கிட்டும்.

:தயாநிதி

 

 

பெத்த கடன்

 

 

முதுமைச் சுருக்கங்கள்
விலக்க இயலா
வறுமைக்கோடுகளாய்
விளைய,

மளிகைக் கடைக்
கடனோடும்,

காய்கறிக் கடைக்
கடனோடும்,

வீதிமுனை வரை
நீண்டிருக்கும்
வட்டிக் கடைக் கடனோடும்,

அவமானத் துண்டால்
முகம் மறைத்து
வீட்டில் வரும் தந்தையிடம்

‘எங்களுக்கு என்ன செஞ்சே’
எனக்கேட்கும்
பெத்த கடன்.

 

மறந்துவிட சொன்னவளுக்கு…

நீ மறந்துவிட சொன்ன நொடியின்,
மரண வலியின் நினைவுகளுடன்
இன்னும் நான்...!

உன் ஞாபகங்களை
உதறித்தள்ள நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும் – நான் தான்
ஒரேயடியாய் தோற்றுப்போகிறேன்…!

உன்னை மறப்பதற்காக – நான் உன்னை
நினைக்க மறுக்கும் நிமிடங்களில்,
ஆக்ஸிஜனில் கூட
அமிலத்தை உணர்கிறேன்…!

இமைகளை
இறுக்கி அடைத்தாலும்,
இதயத்தை
இரண்டு துண்டாய் உடைத்தாலும்
நீ தான் தெரிகிறாய்…!

மறந்துவிட சொன்னவளே – என்னை
மன்னித்துவிடு…!
கடைசியாய் நீ என்னிடம்
விரும்பிக்கேட்டதை – நான்
விரும்பினால் கூட – என்னால்
நிறைவேற்ற முடியாது…!

ஏனென்றால்…
உன்னை நான்
மறப்பதென்பது – நான்
இறக்கும்வரை சாத்தியமில்லை…!

—-அனீஷ் ஜெ…

 

 

சுதந்திரப் பிறவிகள்

 
 
யாரிடமும் அனுமதி கேட்கவில்லை…
என்னிடமும் ஏதும் சொல்லவில்லை…
 
வேலியிட்டு நீர் பாய்ச்சி
வளர்த்த என் குடும்பத்தை
கண்டுகொள்ளவே இல்லை…
 
புதிதாக வளர்ந்த மரத்தில் குடியேறிய

அணிலும் ஓணானும் மரப்பல்லியும்
உச்சியில் கூடு கட்டிய குருவியும்..

 

 

கடை விரிப்பேன்…

 

கடையினை விரித்தேன் கொள்வாரில்லை,
கவிதை மழையைப் பொழிந்தேன்;
விடைகளை நாடித் தவித்திடுகின்றேன்,
வினாக்களால் தான் வாழ்ந்தேன்!

அடைமழை பொழியும், அற்புதம் நிகழும்,
அமோகமாய்ப் பயிர் விளையும்;
தடைகளனைத்தும் தவிடென மாறும்
தருணம் ஒருநாள் வாய்க்கும்!

நடைபயில் குழவி நகைக்கிறபோதில்
நானிலம் மயங்குதல் போல,
குடையதன் பயனை மழையினில் அறிவீர்;
குவலயம் என்னை அறியும்!

இடையிடை யிடையே வந்தெனை மாய்க்கும்
இன்னல்களை நான் சாய்ப்பேன்;
மடையினை உடைத்த வெள்ளம் போல
மகாசக்தியாய் எழுவேன்!

முடையென வருவோர் உள்ளம் மகிழும்,
முகமலர் தானம் பெற்றால்;
கொடையதன் பெருமை கொண்டவிடத்து;
கோவென உயர்வேன் ஒருநாள்!

உடையினில் உடலென, உடலில் உயிரை
உணர்ந்தேன்- உறுவது வாழ்க்கை;
கடை விரிப்பேன், காண்போர் வரினும்
கடமை இதுவெனக் களிப்பேன்!

படையினில் வெற்றி, தோல்விகள் உண்டு,
பயந்தால் பலனெதும் இல்லை;
கடைசியில் பெறுவது காயோ, பழமோ,
கவனம் சிதறிட மாட்டேன்!

கடையினை விரித்தேன் கொள்வாரில்லை;
கவிதை மழையினைப் பொழிந்தேன்;
கடை விரிப்பேன் – காண்போர் வரினும்
கடமை இதுவெனக் காப்பேன்!

.

உண்மையான “நட்பு”

 
காதல் என்பது நேசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பதுmy dear friends……………………..அழகு இருந்தால் வருவேன் என்றது “காதல்”…..பணம் இருந்தால் வருவேன் என்றது “சொந்தம்”…..எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது……………..”நட்பு”

……..இதுவே உண்மையான் “நட்பு”……பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது
உய்ருள்ள வரை

மௌனம்

 

உன்னை சந்திக்கும்
தருணமெல்லாம்
வழிதவறும்
என் வார்த்தைகள்கவிதையாய் வந்து
என் காகிதம்
நிறைக்கிறது
நீ போன பின்பு. Love

 Tamilmaravan

 

 

 

பாலை வனத்து பாத்திரங்கள்

 by ஜன்னல்

சிணுங்கிய மழை கண்டு

என் தாய் சினந்து கொண்டாள்

பள்ளி செல்லவேண்டிய தம்பி

பாத்திரங்களைஅடுக்க ஆரம்பித்தான்

ஒழுக்கின் ஓட்டையடைக்க…
துள்ளித் திரியும் தங்கை

முடங்கினாள் மூலையில்
சிணுங்கிய மழை முகில்கள்

சிதைவுற்றது போலும்
“சோ”வென மழை கொட்ட

சோகமே எம் நிலையானது
வேள்ளம் வாயிலை எட்டியது
நனைந்த காகிதங்கள்

ஓடமாகித் தள்ளாடின

கதியற்ற எம் வாழ்வு போல
மூன்று நாட்கள் முன்

மூட்டிய அடுப்பினலே

முடங்கியது பூனை

மூலையில் முடங்கிய தங்கை

அன்னை மடிதேடினாள்

விழிகள் பசி மெழி பேச

பாலைவனமாய்க்

கிடந்ததுபாத்திரங்கள்

இறைவனால் படைக்கப்பட்ட

மனித பாத்திரங்களும்தான்…

 
“தன்னம்பிக்கை“
விழுவதெனில் விதையாய் விழு
எழுவதெனில் எரிமலையாய் எழு
கருவிலேயே களம்வென்றவன் நீ
கவலைகளை கைக்குட்டையாய் எறி
மகிழ்ச்சியை மனதோடு சேர்
இறக்கத்திலும் இதிகாசம் படை

கவலையில் கண்களை கசக்காதே
கடைசிவரை களம் கண்டிடு
கஷ்டத்திலும் கலகலப்பை மறவாதே
கோழைகளுடன் கைகோர்த்து விடாதே
பாறை என்று பயம் கொள்ளாதே
பாய்ந்து இடுக்குகளில் முளைத்திடு

நிழலுக்கு ஒப்பனையை நிறுத்து
நிஜத்துடன் போராடிப் பழகு
தோல்வி எதுவாயினும் ஏற்றுக்கொள்
தோள்களை வீரத்துடன் தட்டிக்கொள்
துணிவே துணை எனக்கொள்
துணிந்தபின் தூக்குமேடையும் துச்சம்கொள்

உதிர் காலத்தில் உயிர்விட்டால்
வசந்த காலத்தில் வாழவழியேது?
கடிகாரம் சிந்தும் நேரங்களை
நம்பிக்கையுடன் தேடு
கண்ணீர் துளிகளையும்
தண்ணீராய் மாற்றிடு

வெற்றியின் களிப்பு விடியும்வரை
தோல்வியின் மதிப்போ வீழும்வரை
தோல்வியில் ஊரை நீ அறிந்திடு
வெற்றியில் ஊரே உனை அறிந்திடும்.

 மனிதம்
 

ஒரு நாள் மட்டும்…

என்னைப் போல்
தூய்மையான நேசம் கொண்டு
துணையாக இருப்பாயென்று
துணிந்துதானே
என் இதயம் திறந்தேன்! நீ ஏன்
துகள் துகளாய் உடைத்தெறிந்து
துடிக்க வைத்து ரசிக்கின்றாய்…?    
சத்திய . 
எங்கே எனது கவிதைஅழகழகாய் சொல்லிவிட்டு…

புதியதோர் வானில்

பறக்க புறப்படத் துணிந்து விட்டாய் நீ!

கட்டி வைத்த கனவுகள் காற்றோடு

கலைந்து போக…

திசை தெரியாப் பயணத்தில்

திணறித் துடிக்கிறேன் நான்!

 என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!  எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கிஎமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்குஒற்றைத் தலைவனை காலம் கணித்துப் பெற்றவளே ; சொந்தம் கடலென மண் நிறைந்தும் மருத்துவம் தேடி வந்தவளை நெஞ்சங் கல்லாகிநிராகரித்த வஞ்சகத்தார் சுவாசித்த சிறு மூச்சும் வேண்டாமென விட்டவளே ; உள் சுட்ட வடுக்கள் பல யிருக்க இன்னும் தீராத ஏக்கம் வலி வலிக்க போதாத காலம்பூண்டு – பக்கவாதம் தின்றுத் தீர்க்க சிங்களவனின் சிறையால் கூட செத்தவளே; சீவனைத் தொலைத்தவளே; கட்டிய கணவன் மடியில் தாங்க பெற்ற பிள்ளை வீரத் தோளில் சுமக்க உதிராத பூவும் அழிக்காத பொட்டுமாய் உறவுகளின் கண்ணீரில் போறவளே ; தனியாக போனாயோ????? கொள்ளி வைக்க நாங்களிருக்கோம் சந்தனத்தால் சேர்த்து எரிப்போம் தமிழால் , கவியால், தீ மூட்டுவோம்; போனபின்னே எல்லாம் செய்வோம் இருந்தபோது விலகி நின்றோமே; மன்னிப்பாயா???? கட்சி புகழ் வாசனை ஆச்சு நாற்காலி ஆசை உயிர்வரை பரவிப் போச்சு உறவெல்லாம் அங்கே இறந்துக்கிடந்தும் வெள்ளைச்சட்டையே பெருசாச்சு வெட்கத்தால் அழுகின்றோம், வாழும் வரை தலைக் கவிழ்கின்றோம்:
 ஒரு சொட்டுக் கண்ணீரை யேனும்
உன் அஞ்சலிக்காய் விடுகின்றோம்!! —————————————————————————- வித்யாசாகர் 

என்றும் மாறாமல்…

அக்டோபர் 9, 2010


கையை பிடித்து என்னை தரதரவென
இழுத்து போன நாள் முதல் – என்
கையை பிடித்து, தான் தளர்ந்து
நடக்கும் இந்த நாள் வரை…
கடை மாறியது…
ஊழியர்கள் மாறினார்கள்
அரசு மாறியது  – ஏன்?

நானும் மாறிவிட்டேன்- என்றும்
மாறாமல் இருப்பது…
“என்னைக்குதான் சரியான எடையில்
கிடைக்குமோ?”
அரிசியும் பருப்பும் சீனியும்…
நியாய விலை கடையில்… – என்னும்
என் தாயின் வார்த்தைகள் தான்!

 
விடுதலையின் வெள்ளை தீ; பிரிக்கேடியர் சுப. தமிழ்செல்வன்!!
உன் வாழ்க்கை கதைநூறு சொல்லும்
முகமோ அத்தனையையும் ஒற்றைசிரிப்பில் வெல்லும்,
காலம் உன் களப்பணியை நினைவில் கொள்ளும்
தமிழர் வாழும்வரை உன்புகழும் நில்லும்!
வானம் தொடுங் காலம்வரை
சமரிலும் அரசவை படையிலும் நீயே தூணானாய்;
எங்களின் காலம் சொல்லா தீர்ப்பிற்கு – உன் மரணத்தால் ஒரு
தோல்விசாசனம் எழுதிப் போனாய்!
மீண்டும் வெற்றிமுரசு கொட்டும்வரை
ஓயாது எம் ரத்தம், வெட்டி சுக்குநூறாய் போட்டாலும்
குண்டு பல பொழிந்தாலும் –
இறக்க இறக்க பிறக்குமெம் இனம், அது நீ கொடுத்த சினம்!
எம் தமிழர்களை தின்று குவித்த மண்ணில்
ஒர்தினம் வென்றுகுவிப்போம்;
வென்றுகாட்டிய வெற்றிகளை உம் போன்ற
வீரமறவர்க்கே; துயிலம் – சென்றுகுவிப்போம்!
அதுவரை, மூச்சில் நீ சுமந்த சுதந்திர வேட்கையை
உன் சுவடுகள் காற்றினில் கலந்து தரும்,
எமை வஞ்சித்து; அழித்திட்டதாய் நகைக்கும் பகைவர்க்கு
நீ சொல்லிச் சென்ற பாடங்களே நீதியை புகட்டித் விடும்!
வாழ்வின் அசாதாரன சந்தர்ப்பங்களில் – வெற்றியாய் துளிர்த்த
உன் வீரம், விரைந்து எம் மண்ணின் விடிவாய் விடிந்துவிடும்;
அநீதிக்கு துணைபோன வல்லமை தேசத்தை – அன்று நீ
திருப்பி விரட்டிய பயம் – இன்றும் எதிரியை கொன்று போடும்!
வாழ்வின் பாதியை அல்ல, நீ உலகம் பார்க்க துவங்கியதே
ஈழத்து சுதந்திரப் போரில் அல்லவா,
உனக்காய் வாழும் நாட்களை எல்லாம் – நீ
எமக்காய் வாழ்ந்த – உலகறியா விடுதலை தியாகியல்லவா!
உன் வெள்ளை சிரிப்பில் கூட ஒரு தீயுண்டு
அது அன்பிற்கு உடன் எரிகையில் வெளிச்சமாய் பரவியது
ஆணவத்தின் எதிரே எரிகையில் – எதிரே நின்றவரை
வீரமாய் நின்று கொளுத்தியது!
இனி உன் வெள்ளை தீயின் விடுதலை வேட்கை
எம் நெஞ்சில் எரியுமையா;
அது அடங்கும் நாள் – எம் மண்ணில் நீ கேட்ட
சுதந்திரம் கிடைக்குமையா!
காலத்தை எத்தனை ஏமாற்றி வஞ்சித்தாலும்
வெற்றி ஓர்நாள் கிடைப்பது காலத்தின் உறுதியையா –
அந்த வெற்றியை தாங்கும் கொடி; அன்று உன்
உழைப்பையும் தியாகத்தையும் சுமந்தே பறக்குமையா!!
——————————————————————————
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை
‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை
‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்…
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
உறவை ‘லவ்’ என்றாய்
உதவாத சேர்க்கை…
‘ஒய்ப்’ என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை…
இரவை ‘நைட்’ என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய்
அறுத்தெறி நாக்கை…
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்
‘லெப்ட்டா? ரைட்டா?’
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி ‘பைட்டா?’
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை
‘பிரண்டு’ என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
‘சார்’ என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
பாட்டன் கையில
‘வாக்கிங் ஸ்டிக்கா’
பாட்டி உதட்டுல
என்ன ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின்
தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
-காசி ஆனந்தன்-
0

வின்மணி சிந்தனை அடுத்தவரைப் பற்றி குறை கூறும் மனிதனிடம் இருந்து எப்போதும் விலகி இருப்பது நல்லது

 

துளியும் மாறாமல்!!!!!!!!!

அதிகம் பேசும்வாயாடியான நீஊமையாகிப் போனாய்…!ஊமையான நான்உளறிக் கொட்டும்…பைத்தியமாகிப் போனேன்!நம்மை மாற்றியகாதல் மட்டும்இன்னும் அப்படியேதுளியும் மாறாமல்!!!!!!!!

முற்றுகை

இதுவரை காலமும்
நீ இல்லாமல்
நான் வாழ்வேன் என்றேன்
பைத்தியக்காரி
நீ என்னைப் பிரிந்த போதுதான்
நான் என்னைப் புரிந்துகொண்டேன்

என்னுள் மறைந்துகிடந்த நீ
பிரியும்போது எப்படி
விஸ்வரூபம் எடுத்தாய்?

உன் விரல் தொட்ட நாட்களை
விரல்விட்டு எண்கிறேன்
நீ வருவதாயில்லை
நிமிடம் கூட செல்வதாயில்லை

உன் அழைப்பிற்காக
காத்திருந்து காத்திருந்து
களைத்துவிட்டேன்
இதயமோ கனத்து விட்டது
கண்கள்மட்டும்
உன்னைக்காணத் துடிக்கிறது

ஜன்னல்
 

 

வேண்டுகோள்!!

ஜனநாயகத்தின் சர்வாதிகாரிகளே
ஒரு சாமானியனின்
அழுகுரல் சத்தம்
செவிகொடுத்து கேளுங்கள்
இந்த சோகம் – ஒரு
தலைமுறையின் சோகம்
இந்தக் கண்ணீர் – ஒரு
சமுதாயத்தின் கண்ணீர்
இந்தக் கதறல் – ஒரு
ஊமையின் கதறல்
செவி மடுப்பீரோ – நல்ல
மொழி கொடுப்பீரோ?
பிள்ளைகளின் விரலோடித்துவிட்டு
எழுதுகோல் பரிசளிக்கும் எத்தர்களே!!
சிற்றெரும்புக் கூட்டில்
சிறுநீர் கழிக்கும் சிறுமதியாளர்களே!!
நிலவறையை சுரண்டிவிட்டு
பிணவறை நிறைக்கும் பெருமான்களே!!
எங்கள் எலிக்கறிப் பந்தியில்
இலையிட்டு உண்ணும் ஈனர்களே!!
தாயின் மார்பருத்துவிட்டு
பிள்ளைக்கு பழரசமா?
ஏழைகள் கண்ணீர் தெளித்து
உல்லாச பூவனமா?
நாவினைத் துண்டித்துவிட்டு
‘ழ’கரப் பயிற்சியா?
நாடி நரம்புகளைக் கிள்ளிவிட்டு
நல்லெண்ணெய் ஒத்தடமா?
வேட்டை நாய்களுக்கு
வீட்டுப்பூனை வேசமா?
எங்களின் சிற்றுண்டி
திருடி அன்னதானமா?
கல்லறைத்தோட்ட காவலர்களே
உங்களிடம் ஒரு வேண்டுகோள்
முடிந்தால் நிறைவேற்றுங்கள்
இல்லையேல் எனை கழுவேற்றுங்கள்!!
உங்களுடன் பகடையாட
இனி பாஞ்சாலிகள் இல்லை
உங்களிடம் போராட
இனி அர்ஜுனர்கள் இல்லை
எங்களை நாடுகடத்துங்கள்
இல்லையேல் அடிமைப்படுத்துங்கள்
உங்கள் சுதந்திரத்தினும்
அடிமைத்தனம் மேல்!!
என்றும் அன்புடன்,
ஈஸ்வர்யா
 
ஒரு ஏதிலியின் காதல்

கண்களில் துளையிட்டு
இதயத்தில் நட்டு வைத்தாய்
கனவுகளில் உரமிட்டு
நினைவுகளில் நீர்பாய்ச்சி
காலம் கடந்து விருட்சமாய் நிற்கிறேன்
வேரடி மண்ணைக் கூட வேட்டையாடி
வீழ்த்தி விடத் துடிக்கிறார்கள்
துப்பாக்கி முனை திருப்பி
முட்டுக் கொடுத்தேனும்

செங்குருதி நீர் சிந்தி விடாது வளர்க்கிறேன்
தலைமுறை தாண்டியும்
தலைமுறை வென்றெடுக்க
கிளைகளின் நடுவே பழங்கள்
விடுதலை காற்றில் என் சொந்த
மண்ணுக்காய் யுகங்கள் கடந்தாலும்
சுகமாய்க் காத்திருப்பேன்.

(காதலின் வேதனையை எம் ஈழ விடுதலையை ஒப்புமைப்படுத்தி நோக்கியபோது பிறந்த கவிதை
நாள் நினைவில்லை, ஜூன் திங்கள்-1999, இடம் – தூத்துக்குடி
)

மது….

கவிஞர்:தயாநிதி

மரண வாசலின்
முதற்கதவு மது.
நரக வாழ்விற்கு
குறுக்கு வழி மது.

நீ அருந்த விரும்புகிறாய்.
மது அழிக்க விரும்புகிறது.
மனித ஈரல்……
மதுவின் பிரதான உணவு.

மதுவின் உச்ச நிலை
உன் நாவில் தெரியும்.
உன் பேச்சுக்கு
மது கட்டுப்படாது.

பழி பாவம் இவற்றின்
பாதுகாவலன் மது.

கொலை கொள்ளை கற்பழிப்பு
மதுவின் பாட்டாளிகள்.
சட்டத்தை மட்டமாய்
மதிப்பவன் மது.

மரணப் படுக்கையிலும்
மதுவுக்கு நீ சரணம்.
அடித்து விரட்டினாலும்
அகலாத உறவு மது.

சுக போகம் அத்தனையும்
மதுவிற்கே அர்ப்பணமாகும்.
மதுபானம் மனிதன்
உடலை ஊனப்படுத்தும்.

மதுவை வரவேற்கும்
சமயம் எல்லாம்
முகச்சுழிப்பு வழமை.

அடைத்து வைத்தால்
அசையாத மது
குலுக்கித் திறந்தால்
குணத்தைக் காட்டும்.

திறந்தவனையே துரத்தும்
துரோகி மது.
மதுவைக் காதலித்தால்
சாவு சட்டைப் பையில்.

காதலால் கலைபட்டவனுக்கு
மது மறுவாழ்வு கொடுக்கும்.
மது அடிமையாகாது.
மாறாக அடிமைப்படுத்தும்.
மது தன் விடுதலை வரை
மௌனித்துத் கொள்ளும்.

தாய் நாடு

ஈழம் எங்கள் தாய் நாடு
இதயக் கோவிலில் அதன் வீடு.
வையக ஓரத்திலே ஒரு கூடு
அமைத்திட விளைந்ததினால் விழுக்காடு

பண்டார வன்னியனின் பெரும் காடு
சிங்களன் பிடியினில் விழுந்தது பெரும்கேடு.
கொண்டாடி மகிழ்கிறது அவன் நாடு.
திண்டாடித் தவிக்கிறதே தமிழ்ப் பேடு.

வந்தாரை வாழ வைத்த பண்பாடு
அதனால் குலைந்ததுவே சீர் கேடு
இதுதான் உண்மையின் நிலைப்பாடு.
இதற்காய் போடு ஒரு எல்லைக் கோடு.

வாழ்வே என் நாளும் கூப்பாடு.
சாவே எங்களின் அன்றாட சாப்பாடு.
தாயகம் மீட்பதுவே இன்றய கோட்பாடு
அதற்காய் உழைப்பதே எங்களின் ஏற்பாடு.

தயாநிதி

எனக்குத்தேவையில்லை தனியொரு தினம்!


என்னுடல் வளர்க்க

உன்னுடல் இம்சித்தாய்..

அன்னையே !

ஈரைந்து மதங்கள்

என் கருவையே சுவாசித்தாய்..

உன் வம்சம் என்னையே

வெளி சொல்இயலா வழியிலே

உன்னையே ஒப்புக்கொடுத்தாய்..

என் பிண்டம் வளரவே

உன் மார்பில் இடம் கொடுத்தாய்..

எத்தனை நாளாய் நீ

இரவும் பகலும் விழித்திருந்தாய்!

உன்கைகள் ஓடியவே

தொட்டிலதை தாலாட்டி,

உன் செவ்வாய் இதழ்வழிக்க

இராகங்கள் நீ பாடி,

எத்தனை கடமையிலும்

என்மீது கண்வைத்து,

ஏதேனும் அருந்தும்முன்

ஒருமுறை நீ சுவைத்து,

ஏதேனும் யாராலும்

இடித்தாலும் கடிந்தாலும்

என்கண்கள் நீர்வழிய

உன் தோல்கள் இடம்கொடுத்து..

என்றுமே எனக்காக

நீ இருந்தாய் என்அன்னையே!

என்முதல் தவரலில்

ஓடிவந்து கட்டி அனைத்து,

என்கால்கள் எட்டுவைக்க

உன்முத்தம் தொட்டுவைத்து,

என்வாய் மொழியுரைக்க

உன்வாய் உச்சிமுகர்ந்து,

எத்தனை சந்தோசம்

என்அன்னையே உன்முகமதனில்!

என்பள்ளிப்பாடமதில்

என்றுமே பின்னேற்றம்..

என்கல்லூரி நாட்களிலும்

ஏதோ ஒரு திண்டாட்டம்..

என் வாழ்வின் தொடக்கத்தில்

அன்றுமாய் கலியாட்டம்!

அத்தனைக்கும் புன்னகைத்து

எனக்கேதெரியாமல்

முழுதுமாய் தோல்கொடுத்து,

என் ஒவ்வொரு அணுவிலும்

கலந்த என்னுயிர் அன்னையே..

எப்படி மறப்பேன்

ஒருநொடியிலும் நின்னையே!!!

எனக்குத்தேவையில்லை தனியொரு தினம்!

 

வைக தமிழ்

3 பதில்கள் -க்கு “பகிர துடிக்கும் படித்து சுவைத்தவைகள்”

 1. […] (பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி) […]

 2. […] (பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி) […]

 3. […] (பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி) […]

%d bloggers like this: